திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அடுத்தடுத்து 10 வீடுகளின் பூட்டை உடைத்து சுமார் 25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் உள்ளிட்டவை திருடப்பட்ட சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களுக்காக, ஆலையின் அருகில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இந்த குடியிருப்பில் வசிக்கும் சில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இங்குள்ள 10 வீடுகளிலும், ஒரு குடோனிலும் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.