குவைத் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
குவைத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழர்கள் 7 பேர் உட்பட 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகினர். சென்னை ராயபுரத்தை சேர்ந்த சிவசங்கர் என்பவர் உடல் கருகி பலியாகிய நிலையில் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதேபோல, தீ விபத்தில் சிக்கி தூத்துக்குடியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரும் உயிரிழந்தார். இவரது உடலும் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் மாரியப்பனின் உடலுக்கு பல அமைப்பினர் அஞ்சலி செலுத்திய நிலையில் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருச்சியை சேர்ந்த ராஜிஎபினேஷன் என்பவர் குவைத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், அவரும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கேராளாவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு எடுத்து வரப்பட்ட ராஜிஎபினேஷனின் உடல் சொந்த ஊரான நவல்பட்டு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி அரசால் வழங்கப்பட்ட 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். இதையடுத்து அவரது உடல் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தீ விபத்தில் உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமுவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தென்னவனூருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத நிலையில், இறுதி சடங்குகள் நடத்தி கருப்பணன் ராமுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குவைத் கொடூர தீவிபத்தில் சிக்கி தஞ்சையை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய் உயிரிழந்த நிலையில் அவரது உடல் அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊரான ஆதனூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். அப்போது அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து புனாப் ரிச்சர்ட் ராயின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம், முட்டம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவரும் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்று கொண்ட குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து சின்னதுரையின் உடமைகள் மற்றும் இறப்பு சான்றிதழ் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபட்டது.