மேட்டூர் அணையில் இருந்து திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கப்படாத நிலையில், தமிழக அரசு டெல்டா குறுவை சாகுபடிக்கு சுமார் 78 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு தொகுப்பை அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12- ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவில் குறுவை சாகுபடி செய்வதற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மேட்டூரில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, டெல்டா குறுவை சாகுபடிக்கு 78 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறப்புத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக வேளாண்துறை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு 40 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளை வழங்க 24 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து 78 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.