திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை சூறையாடியது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில், மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரும், இளம்பெண்ணும் காதலித்த நிலையில், அவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இருவரும் திருநெல்வேலியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அங்கு வந்த பெண் வீட்டார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை சூறையாடினர். இதில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக, திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடியது தொடர்பாக 13 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.