எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை தமிழக அமைச்சர்கள் தொடர்ச்சியாக நிராகரிப்பதாக பாமக சட்டப் பேரவைக் கொறடா அருள் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் கடிதம் எழுதியுள்ள அவர்,
அமைச்சர்களிடம் தான் வைத்த ஆயிரத்துக்கும் அதிகமான கோரிக்கைகளில், இதுவரை 9 கோரிக்கைகளுக்கு மட்டுமே சாதகமான பதில் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
முன்பெல்லாம் திமுக, அதிமுக அரசானாலும் சரி, எம்எல்ஏக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை உடனுக்குடன் அமைச்சர்கள் கேட்பார்கள் என பல மூத்த எம்எல்ஏ-க்கள் தம்மிடம் கூறியதாக அந்தக் கடிதத்தில் பாமக சட்டப் பேரவைக் கொறடா அருள் கூறியுள்ளார்.
ஒருவேளை அதை நிறைவேற்ற முடியவில்லை என்றால், அதுகுறித்து பேரவையில் அமைச்சர்கள் விளக்கம் அளிப்பர் என்று தெரிவித்த அவர், ஆனால் தற்போது அப்படியில்லை என்று கூறியுள்ளார். தன்னைப் போன்ற சூழலை எதிர்கொண்ட எம்எல்ஏக்கள், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேரவையிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ முறையிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.