சென்னையை அடுத்த பூந்தமல்லி காவல் நிலையத்தில் காதலனால் கைவிடப்பட்ட சிறுமிக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து மகளிர் காவல் ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 4 பெண் காவலர்கள் தாய்மை அடைந்துள்ளனர். மகப்பேறுக்காக, மருத்துவ விடுப்பில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.
இவர்களுக்கு காவல் நிலையத்தில் வைத்து வளைகாப்பு நடத்த சக காவலர்கள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, காவல் ஆய்வாளர் இந்திராணி தலைமையில், 4 பேருக்கு சீரும் சிறப்புமாக வளைகாப்பு நடத்தப்பட்டது.
அப்போது, விசாரணைக்கு வந்த 15 வயது சிறுமிக்கும் சேர்த்து வளைகாப்பு நடத்தப்பட்டது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர், உத்தரவின் படி காவல் ஆய்வாளர் இந்திராணியிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.