திமுக மாணவர்களின் கல்வியோடும் விளையாடிக் கொண்டிருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பள்ளிக் காலத்திலேயே திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும், பயிற்சிகளையும் வழங்கி ஊக்குவித்து, உலகத் தரமான வீரர்களாக உருவாக்க வேண்டும் என்பதே பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கேலோ இந்தியா திட்டத்தின் நோக்கம்.
இதன்படி, தமிழக அரசும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், திறமையான பள்ளிக் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை முதன்மை நிலை விளையாட்டு மையம் சார்பாக நடத்தப்படும் விடுதிகளில் தங்க வைத்து, அவர்களுக்கான கல்வி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு, விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் பள்ளிக் குழந்தைகளுக்கான தேர்வு, கடந்த மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற்று, மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்காக, விளையாட்டுப் போட்டிகளின் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, திருநெல்வேலி என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்படவிருக்கும் விடுதிகளும் அறிவிக்கப்பட்டன.
இந்த விடுதிகள் அமைந்திருக்கும் ஊர்களில் உள்ள அரசு/தனியார் பள்ளிகளில், இந்த மாணவர்களுக்கான கல்வி இடங்களும் ஒதுக்கீடு செய்திருக்கப்பட வேண்டும். ஆனால், பள்ளிகள் திறந்து இத்தனை நாட்களாகியும், விடுதிகளோ, இந்த மாணவர்களுக்கான கல்வி இடங்களோ இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிய வருகிறது. குறிப்பாக, தமிழகம் முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, வில்வித்தை, பாட்மிண்டன், சைக்ளிங் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் சுமார் 75 மாணவர்களுக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் விடுதி வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விடுதி இன்னும் திறக்கப்படவில்லை என்பதோடு, இந்த 75 மாணவர்களுக்கும், இன்னும் எந்தப் பள்ளிகளிலும் இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறந்து இரண்டு வாரங்கள் கடந்தும், இன்னும் இந்த 75 மாணவர்களும், எந்த அறிவிப்பும் வராமல், பள்ளிக்குச் செல்லவும், பயிற்சிகள் மேற்கொள்ளவும் முடியாமல் வீட்டில் அடைந்து கிடக்கின்றனர்.
தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டிகளுக்கு, தமிழகம் சார்பாக மாணவர்களை அனுப்பாமல் புறக்கணித்த வரலாறு கொண்ட திமுக அரசு, தற்போது மாணவர்களின் கல்வியோடும் விளையாடிக் கொண்டிருக்கிறது. இதற்குப் பொறுப்பான தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரோ, இது குறித்த எந்தக் கவலையுமின்றி ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
உடனடியாக, இந்த விளையாட்டு விடுதிகளைத் திறந்து, மாணவர்கள் பயிற்சிகள் மேற்கொள்ள வசதிகளை ஏற்பாடு செய்வதோடு, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அத்தனை பள்ளி மாணவர்களுக்கும், சிறந்த பள்ளிகளில் இடம் ஒதுக்கீடு செய்து, அவர்கள் கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.