உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு மத்தியிலும் இந்திய ஏற்றுமதி துறை ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த மே மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 9.1 சதவீதம் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
இது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் 498 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2022 -2023 ஆம் ஆண்டில் 770 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. இந்த இரண்டாண்டுகளில் 24 சதவீத வளர்ச்சியைத் தொட்டது.
நடப்பாண்டில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக இந்தியாவின் ஏற்றுமதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முன்னோட்டமாக, கடந்த மே மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 38.13 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
பொறியியல் , எலக்ட்ரானிக்ஸ், மற்றும் மருந்து தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்றுமதி இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில், பெட்ரோலியப் பொருட்கள், போக்குவரத்து சார்ந்த உபகரணங்கள், தாவர எண்ணெய் வகைகள் மற்றும் வெள்ளி ஆகியவைகளின் ஏற்றுமதி மிகவும் அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்தியாவின் இறக்குமதி வர்த்தகம் 7.7 சதவீதம் குறைந்திருக்கிறது.
ஜவுளி போன்ற துறைகளில் ஏற்பட்ட மந்தநிலை மாறி, இத்துறைகளின் ஏற்றுமதி, 9.8 சதவீத வளர்ச்சியைக் கண்டிருப்பதாக கூறிய மத்திய அரசின் வர்த்தக செயலாளர் சுனில் பார்த்வால், வளர்ந்த நாடுகளில் பணவீக்கம் குறைந்து வருவதால், அந்நாடுகளில் உள்ள மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டில், உலக அளவில் அதிக பணவீக்கம், அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் மந்தமான நுகர்வோர் தேவை, காரணமாக உலக வர்த்தகத்தில் ஒரு மந்தநிலை ஏற்பட்டது. அது தற்போது படிப்படியாக மாறி வருகிறது.
பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 15.75 சதவீதமும், பொறியியல் பொருட்கள் 7.39 சதவீதமும் எலக்ட்ரானிக் பொருட்கள் 22.97 சதவீதமும் மருந்து மற்றும் மருத்துவ உபகரனங்களின் ஏற்றுமதி 10.45 சதவீதமும் உயர்ந்துள்ளதாக அதிகார பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதி 28 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், தங்கம் இறக்குமதி குறைந்திருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கல் வகைகள் மற்றும் நகைகள், கடல் பொருட்கள், இரும்பு தாது, முந்திரி மற்றும் எண்ணெய் உணவுகள் ஆகியவற்றின் ஏற்றுமதி பெரும் சரிவைக் கண்டிருக்கின்றன. ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் சந்தைகளில், சில இந்திய மசாலாப் பொருட்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மசாலாப் பொருட்களின் ஏற்றுமதியும் வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றன.
அமெரிக்கா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியா மற்றும் இங்கிலாந்து ஆகிய ஐந்து நாடுகளுக்கான ஏற்றுமதியில் இந்தியா அதிக அளவில் வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது.
‘ஆத்ம நிர்பர்’ என்ற கொள்கைக்கு ஏற்ப,உலகளாவிய வர்த்தகத்துடன் ஒருங்கிணைக்க ஒவ்வொரு இந்திய மாநிலத்தையும் ஊக்குவித்து ,மேம்படுத்திய மத்திய அரசின் நடவடிக்கைகளால், இந்தியாவின் ஏற்றுமதித் துறை ஆச்சரியப் படத் தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்என்ற இலக்கை இந்திய ஏற்றுமதி துறை தொடும் என்கிறார்கள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள்.