சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி சென்னைக்கு வர இருந்த நிலையில், அவரது பயணம் திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு, நரேந்திர மோடி வரும் 20-ம் தேதி சென்னைக்கு முதல் முறையாக வருகை தர இருந்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை அவர் தொடங்கி வைக்கவிருந்தார். இந்நிலையில், பிரதமரின் தமிழகப் பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி சென்னைக்கு வருகை தரவிருந்த நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மறு தேதியை அறிவித்த பிறகு, திட்டமிட்டபடி சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்வோம் என பாஜக நிர்வாகிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் மோடியின் சென்னை பயணம் ஒத்திவைக்கப்படுவதாக ரயில்வே தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.