மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கு முன்னதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்துறையினர், மாநில நிதியமைச்சர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
2024-25-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் அடுத்த மாதம் இரண்டவது வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்க உள்ளார். அந்த வகையில், வருவாய் துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ராவுடன் அவர் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வரும் 20-ம் தேதி தொழில்துறையினர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் என பல்வேறு தரப்பினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போன்று, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக மாநில நிதியமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.