கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 28 பேரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 40-க்கும் மேற்பட்ட அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்கள் ஊர்வலமாக கருணாபுரத்தில் உள்ள கோமுகி ஆற்றங்கரைக்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் கொட்டும் மழைக்கிடையே 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. மேலும் 7 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டன. அப்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மயானத்தில் கண்ணீர் சூழ நின்றிருந்தது காண்போர் நெஞ்சை உறையச் செய்தது.