“கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில், உண்மையைக் வெளிக்கொண்டு வரும் வகையில், மத்திய அரசு சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்” என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில், கள்ளச்சாராயத்தால் 40-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன” என தெரிவித்துள்ளார்.
“இந்த விவகாரத்தில், 90 -க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்” என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும், “கடந்த 2023 -ஆம் ஆண்டு மே மாதம், மரக்காணத்தில் இதேபோன்று ஒரு சம்பவம் மூலம் 23 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று அந்தக் கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து, ” உள்ளூர் காவல்துறையினருக்குத் தெரிந்தே, திமுகவைச் சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருகின்றனர்” என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, “இந்த விவகாரத்தில் மாநில காவல்துறையினர் உண்மையை வெளிக்கொண்டு வருவதை தி.மு.க அரசு தடுக்கும் என்பதால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.