ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீ நகரை சென்றடைந்தார். அப்போது அவருக்கு ஜம்மு-காஷ்மீரின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு காஷ்மீரை மாற்றியமைத்தல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது ஸ்ரீ நகரில் புதியதாக அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன கடிதத்தையும் அவர் வழங்கினார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி,
ஜம்மு & காஷ்மீரில் இன்று நாம் காணும் மாற்றங்கள், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசின் உழைப்பால் கிடைத்தது என்றார். மேலும், சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்களை அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது எனவும், ஜம்மு & காஷ்மீரின் எதிரிகளுக்கு பாடம் கற்பிக்க தயங்க மாட்டோம் என உறுதியளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பின்னர் ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான 84 பெரிய வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.