சர்வதேச யோகா தினத்தையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் யோகாசனம் செய்தனர்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர்ஆர்.என்.ரவி, மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்று யோகா செய்தனர்.
ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு யோகநாடி சுத்தி, சாம்பவி முத்ரா போன்ற பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன.
கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிலையத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிலையத்தை சேர்ந்த சுவாமி கரிஸ்தானந்தா, பூதிதானந்தா, விரஹானந்தா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை, அடையாறு இந்திரா நகர் பகுதியில் உள்ள நேரு யுவா கேந்திராவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பணம் கொடுப்பது என்பது அந்த நேரத்தில் உதவுவதாக இருக்கலாம் என்றும், அது தவறான நடைமுறை என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, வடசென்னை மண்டல தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் யோகா செய்தனர்.
புதுச்சேரி அரசு சார்பில் யோகா தினம் கடற்கரை சாலையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், தலைமை செயலர் சரத் சவுகான் உள்ளிட்ட 3,500 பேர் பல்வேறு ஆசனங்களை செய்தனர். தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, யோகாவை சிரமமமாக நினைக்காமல் கலையாக நினைத்து கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.