சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் யோகாசனம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஒரே இடத்தில் கூடி யோகாசனம் செய்து வருகின்றனர். டெல்லி லோதி கார்டன் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்று யோகாசனம் செய்தார்.
இதேபோல், டெல்லியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஜேபி நட்டா பங்கேற்று யோகாசனம் செய்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லியில் பல்வேறு நாட்டு தூதர்களுடன் இணைந்து யோகாசனம் செய்தார்.
மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தமது இல்லத்திலேயே யோகாசனம் செய்து அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார். பல கடினமான யோகாசனங்களை அவர் மிக எளிதாக செய்தது காண்போரை வியக்க வைத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்தார்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் உள்ள நாடாபெட் பகுதியில் நடைபெற்ற 10-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் பங்கேற்றார்.