விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக முன்னாள் நிர்வாகி உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்ற வழக்கறிஞரிடம், ரேவதி என்பவர் ஜூனியராகப் பணியாற்றி வருகிறார். ரேவதியுடன் வசித்து வந்த அவரது பெரியம்மா கோசலை கடந்த வாரம் உயிரிழந்தார்.
கோசலையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது அண்ணன் மகன் ஜெயப்பிரகாசம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்நிலையில், மகேஸ்வரனும், ரேவதியும் தங்களது அலுவலகத்தில் இருந்தபோது, ஜெயப்பிரகாசம் தரப்பினர் அங்கு வந்து தாக்குதல் நடத்தினர். இதில், காயமடைந்த ரேவதி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.