விநாயகருடன் விளையாடிய பாலகனாக, சூரனை சம்ஹாரம் செய்த இளைஞனாக, வள்ளியை மணமுடிக்க வந்த முதியவராக என இந்த மூன்று கோலங்களிலும் முருகப் பெருமான் காட்சி அளிக்கும் ஒரு அற்புத கோயில் சென்னைக்கு அருகிலேயே இருக்கிறது. இக்கோயிலைப் பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்.
சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பொன்னேரி செல்லும் சாலையில் ஆண்டவர் குப்பம் ஊரில் இந்த கோயில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில், ஆண்டிக் கோலத்தில் முருகன் காட்சி தந்ததால் இத்தலம் ஆண்டவர் குப்பம் என்று அழைக்கப்படுகிறது.
தம்மை வணங்காமல் சென்று பிரம்மாவிடம் பிரணவத்தின் அர்த்தம் என்ன என்று கேள்வி கேட்ட முருகப் பெருமான், விடை தெரியாத பிரம்மனின் தலையில் குட்டியதாக வரலாறு. அப்போது நின்ற அதே அதிகார தோரணையோடு இந்த கோயிலில் முருகப் பெருமான் எழுந்தருளி இருக்கின்றான் என்று தல வரலாறு கூறுகிறது.
எனவே , இந்தக் கோயிலில், மூலவர் முருகனுக்கு நேர் எதிரே, பிரம்மா உருவமில்லாமல் இருக்கிறார். பிரம்மன் உருவத்துக்குப் பதில் தாமரை,கமண்டலம்,மற்றும் அட்சர மாலை மட்டுமே வைக்கப் பட்டுள்ளது.
கோபுரத்தை வணங்கிவிட்டு , கொடி மரம்,பலிபீடம் மயில் வாகனம்,கடந்து உள்ளே சென்றால், கருவறையில் கிழக்கு நோக்கி ஸ்ரீபால சுப்பிரமணியராக நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார் முருகப்பெருமான். தனது இடது திருக்கரத்தை இடையில் வைத்தபடி, அழகாக தோற்றமளிக்கும் இந்த முருகப் பெருமானின் அழகே இந்தக் கோயிலின் சிறப்பம்சம். அதிகாரத் தோரணையில் இருப்பதால் , இங்கே முருகன் அதிகார முருகன் என்று போற்றப்படுகிறார்.
அழகிய சிற்பங்களுடன் விளங்கும், 16 கால் மண்டபம் இருக்கும் இக்கோயிலில், விநாயகப் பெருமான், காசி விசுவநாதர்,காசி விசாலாட்சி,நடராஜர்,சண்டீசர் சன்னதிகள் இருக்கின்றன.
இந்தக்கோயிலில் , காலையில் பாலனாகவும் , நண்பகலில் இளைஞனாகவும், மாலையில் வயோதிகனாகவும் கொள்ளை அழகுடன் காட்சி அளிக்கிறார்.
ஐப்பசியில் மகா கந்தர் சஷ்டி திருவிழா,கார்த்திகையில் திருக்கார்த்திகை திருவிழா, சித்திரையில் பிரம்மோஸ்த்தவம், ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகின்றன.
அதிகாரத் தோரணையில் காட்சி அளிப்பதால், இந்த பால சுப்பிரமணிய சுவாமியைத் தரிசித்தால் ,உயர்பதவிகள் கண்டிப்பாக கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் பரணி நக்ஷத்திர நாளில் இரவில் இக்கோயிலில் வந்து தங்கி, மறுநாள் காலை, சுவாமியைத் வணங்கினால், வாழ்வில் சௌபாக்கியம் உண்டாகும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற திருத்தலமான, இந்த ஸ்ரீ பால சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மேன்மை அடைவோம்.