மத்திய அரசு தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கும் கடுமையான சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம், எஸ்எஸ்சி. ரயில்வே, வங்கித் தேர்வுகள் மற்றும் தேசிய தோ்வுகள் முகமை நடத்தும் நீட், நெட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க, பொதுத்தோ்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா 2024-ஐ, மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து அந்த மசோதா சட்டமானது. தற்போது அந்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் நேற்று பிறப்பித்தது.
இந்த சட்டத்தின்படி, தோ்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.