உள்நாட்டு விமானச்சந்தையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 5வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாக முன்னேறியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
உலகளவில், உள்நாட்டு விமானச் சந்தையில், அமெரிக்காவும் சீனாவும் தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அடுத்ததாக, மூன்றாவது இடத்தில் பிரேசிலும், நான்காவது இடத்தில் இந்தோனேசியாவும் இருந்து வந்தன.
2014ம் ஆண்டுக்கு முன், சுமார் 80 லட்சம் இருக்கைகளைக் கொண்ட மிகச் சிறிய உள்நாட்டு விமானச் சந்தையாக இந்தியா இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக முன்னேறி, பிரேசில் மற்றும் இந்தோனேசியாவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒன்றரை கோடி இருக்கைகளுடன் உள்நாட்டு விமானச் சந்தையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது என தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் 2014ம் ஆண்டிலிருந்து விமானச்சந்தையில், ஆண்டுக்கு சராசரியாக 6.9 சதவீத வளர்ச்சி விகிதத்தில் இந்தியா வளர்ந்து வருகிறது என்று கூறியுள்ள அந்த அறிக்கையில், அதே கால கட்டத்தில் 6.3 சதவீத வளர்ச்சியுடன் சீனா உள்நாட்டு விமானச் சந்தையில் பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இன்னொரு முக்கியமான விஷயமாக, 2014 ஆம் ஆண்டு 32 சதவீதமாக இருந்த இண்டிகோ விமானச் சேவை நிறுவனத்தின் சந்தை பங்கு, இந்த ஆண்டு 62 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், இருமடங்காக அதிகரித்துள்ளதுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி மட்டும் 4,56,910 உள்நாட்டுப் பயணிகள், இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களில் பயணித்து உள்ளனர். கொரோனா தொற்றுநோய் தாக்குதலுக்குப் பிறகு ஒரே நாளில் அதிக உள்நாட்டுப் பயணிகள் விமானங்களில் பயணித்த சாதனையாகும்.
2014ம் ஆண்டு, இந்தியாவில் 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கையை 10 ஆண்டுகளில் 157 ஆக உயர்த்தியதும், விமான நிலையங்களின் நிர்வாக மேம்பாடும் ,அதிக உள்நாட்டு பயணிகளை ஈர்த்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் இந்திய விமானத் துறை வலிமையான வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும், பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் அடுத்த 25 ஆண்டுகளுக்கான விமானத் துறை வளர்ச்சியின் செயல் திட்டம் தெளிவாக இருப்பதாகவும் கூறப் பட்டுள்ளது.
குறிப்பாக, 2023ம் ஆண்டில் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் டிஜி யாத்ரா செயலியைப் பதிவிறக்கம் செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு கிட்டத்தட்ட 91 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் டிஜி யாத்ரா செயலியை பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.