அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கும் முடிவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், பல பணிகளுக்கு இதுவரையில்லாத வகையில் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொதுவாக குரூப்- 2, 2ஏ தேர்வுகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தற்போது இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 37 வயது வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவித்திருப்பது சமூக நீதிக்கு எதிரானது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசுப் பணிக்காக போட்டித் தேர்வுகளுக்கு தங்களைத் தயார் செய்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத வகையில் புதிதாக வயது வரம்பு திணிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதுகுறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளிக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.
மேலும், குரூப் 2, 2ஏ பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கும் முடிவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திரும்பப் பெற வேண்டும் எனவும் புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்