கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இருவர் தப்பியோடிய நிலையில் அவர்களை போலீசார் மீட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 160க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்தனர். இதில் பலருக்கு கண் எரிச்சல், வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதையடுத்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜா, சின்னதுரை ஆகிய இருவர் சிகிச்சையில் இருக்கும்போதே மருத்துவமனையில் இருந்து தப்பியோடினர். அவர்களை தீவிரமாக தேடி வந்த போலீசார் இருவரையும் மீட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.