உத்தர பிரதேச மாநிலம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. சசிதரூருக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சசிதரூர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் உத்தர பிரதேச மாநிலத்தைக் கேலியாக சித்தரிக்கும் படம் ஒன்றைப் பதிவு செய்தார். “தேர்வுகள் நடைபெறும் முன் வினாத்தாள் வெளியாவதுதான் உத்தர பிரதேசம்” என்று சித்தரிக்கப்பட்டிருந்த அந்தப் படத்தை ‘அற்புதமான ஒன்று’ என சசிதரூர் வர்ணித்திருந்தார்.
அவரது இந்தப் பதிவுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ராஜீவ் சந்திரசேகர், சக இந்தியர்களை அவமதிக்கும் காங்கிரஸின் வெட்கக்கேடான அற்பத்தனமான அரசியலை சசிதரூரின் எண்ணம் வெளிப்படுத்துவதாக விமர்சித்துள்ளார்.
ஏற்கெனவே முன்னாள் காங்கிரஸ் அயலக பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தென்னிந்தியர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை நினைவுகூர்ந்த ராஜீவ் சந்திரசேகர், ஆதிக்க மனோபாவம் காங்கிரஸின் டிஎன்ஏ-வில் ஊறிப்போய் இருப்பதாக குற்றம்சாட்டினார்.