டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில், அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையை ஜூன் 26-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், அந்த உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, கெஜ்ரிவாலை ஜாமீனில் விடுவித்தால், அவர் நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என்று உறுதியளித்தார்.
வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கில் தற்போதைய சூழலில் உத்தரவு பிறப்பித்தால், இந்த விவகாரத்தை முன்கூட்டியே தீர்மானித்துவிட்டதாக அர்த்தமாகிவிடும் என்று கூறினர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 26-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.