96 சதவீதத்திற்கும் மேல்இஸ்லாமியர்கள் வாழும் நாடான தஜிகிஸ்தானில் இல்ஸாமியர்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஹிஜாப் அணிந்தால், 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி பார்ப்போம்?
கடந்த 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் சிறு சிறு நாடுகளாக பிரிந்த போது, தஜிகிஸ்தான் நாடு உருவானது. மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தான்,தெற்கே ஆப்கானிஸ்தான், மேற்கே உஸ்பெகிஸ்தான், வடக்கே கிர்கிஸ்தான், மற்றும் கிழக்கே சீனா ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ளது.
96 சதவீதத்துக்கும் அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் தஜிகிஸ்தானில், அதிபர் எமோ மாலி பதவிக்கு வந்ததில் இருந்தே, தஜிகிஸ்தானை ஒரு மதசார்பற்ற நாடு என அடையாளப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் எமோ மாலி, பொது இடங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியக்கூடாது என வலியுறுத்தி வருகிறார்.
கடந்த 2007ஆம் ஆண்டு இஸ்லாமிய ஆடைகள் மற்றும் மேற்கத்திய உடைகளான மினி ஸ்கர்ட் ஆகியவற்றை மாணவர்கள் அணிவதற்கு தஜிகிஸ்தான் அரசு தடை விதித்தது.
அப்போதே, இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் உடைக்கும் தடை விதிக்கும் சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் எமோமாலி ஒப்புதல் அளித்திருந்தார்.
2015ம் ஆண்டிலிருந்தே, அதிபர் எமோ மாலி, இஸ்லாமிய மத அடையாளமாக கருதப்படும் ஹிஜாப்புக்கு எதிரான பிரச்சாரத்தைத் தீவிரமாக்கியதோடு, மோசமான கல்வியின் அடையாளமே இந்த ஹிஜாப் என்று விமர்சனம் செய்திருந்தார். தொடர்ந்து ,வெளிநாட்டு நாட்டு ஆடைகளை அணிவது, தாஜிகி சமூகத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
2017 ஆம் ஆண்டில், தாஜிகி உடைகளை அணியுமாறு அந்நாட்டு பெண்களை வலியுறுத்தும் தானியங்கி தொலைபேசி அழைப்புக்கள் அரசு சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டு, அரசால் ஏற்றுக் கொள்ள கூடிய தாஜிகி பாரம்பரியத்தைக் காட்டும் ஆடைகள் மற்றும் ஆடைகளின் நீளம், நிறம் மற்றும் வடிவங்களைப் பட்டியலிட்ட ஒரு கையேட்டை ‘பெண்களுக்குப் பொருத்தமான ஆடைகள்’ என்று 376 பக்கங்கள் கொண்ட ஒரு கையேட்டை அரசு வெளியிட்டது.
இப்படி , பல ஆண்டுகளாக மத ஆடைகளுக்கு அதிகாரப்பூர்வமற்ற கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, தாஜிகிஸ்தான் அரசு, தற்போது ஹிஜாப் அணிவதற்கு தடை கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதா கடந்த மே 8ம் தேதி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, இந்த ஆண்டு புனித ரமலான் பண்டிகைக்குப் பிறகு ஜூன் 19 ஆம் தேதி நாடாளுமன்ற மேல் சபையிலும் இந்த ஹிஜாப் தடை சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. ஹிஜாபை “வெளிநாட்டு ஆடை” என்று குறிப்பிட்டுள்ள தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் தெரிவித்த கருத்துகளுக்கு ஒப்புதல் அளித்து , இந்த வரலாற்று சிறப்புமிக்க சட்டம் தஜிகிஸ்தானில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தகஜிஸ்தான் தேசிய பண்பாட்டுக்கு அந்நியமாக உள்ள ஆடைகளை இறக்குமதி செய்வதற்கும், அவற்றை உள்நாட்டில் விற்பனை செய்வதற்கும், தகஜிஸ்தான் அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டம் தடை செய்கிறது.
தடையை மீறுபவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும், புதிய சட்டத்தை மீறும் அரசு அதிகாரிகள் மத அலுவலர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே அதிகரித்து வரும் மதவெறியின் விளைவாகவே , அதிபர் எமோ மாலி , இந்த சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளில் தஜிகிஸ்தானில் ஏராளமான மசூதிகள் கட்டப்பட்டுள்ளன என்றும், அதிகமான அளவில் இஸ்லாமிய மத ஆய்வுக் குழுக்களும் உருவாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தான் எல்லை பகுதியில் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களின் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதைத் தடுக்கும் வகையிலேயே இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரமலான்பண்டிகையின் போது. குழந்தைகளுக்குப் பணம் பரிசாக அளிக்கப்படுவதையும், ரமலான் பண்டிகையைத் தொடர்ந்து வரும் இதர இஸ்லாமிய மத பண்டிகைகள் கொண்டாடுவதையும் தஜிகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
இறுதி சடங்குகளில் கருப்பு ஆடைகள் தடை செய்யப்படுவதோடு, பல ஆண்டுகளாக, புதர் போல வளர்ந்த தாடியுடன் இருக்கும் ஆண்களை வலுக்கட்டாயமாக பிடித்து மொட்டையடித்து விடவும் தஜிகிஸ்தான் அரசின் இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது.