சனாதனம் குறித்த அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமீன் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெங்கு, மலேரியா போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதுதொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பெங்களூரு நீதிமன்றம் 2 முறை சம்மன் அனுப்பியும் உதயநிதி ஆஜராகவில்லை.
இந்நிலையில் 3-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது சனாதனம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என உதயநிதி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அத்துடன், உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி 1 லட்சம் ரூபாய் பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.