கோவை மேட்டுப்பாளையம் அருகே காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக மணப்பெண் குடும்பத்தாரை, கடந்த மூன்று ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னூர் அருகேயுள்ள வடக்கல்லூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் – தமிழ்ச்செல்வி தம்பதியின் மகள் ஷர்மிளா. இவர் அதே கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்யவும், காதல் திருமணம் செய்யவும் பல ஆண்டுகளாக தடை இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மணப்பெண் வீட்டாரும் உறவினர்களும் சுப துக்க நிகழ்வுகளில் பங்கேற்கவும், கோயில் விழாக்களில் பங்கேற்கவும் ஏழு பேர் கொண்ட குழுவினர் தடை விதித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை சுந்தரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.