டெல்லியில் காற்றுடன் பெய்த கனமழையால் டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
டெல்லியில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடுக்கிடையே விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.
மேலும், விமான நிலையத்தில் சரிந்து விழுந்துள்ள மேற்கூரையை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு எகஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதவில், டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் உதவ விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, டெல்லியில் அதிகாலை 1.15 மணி வரை பிரகதி மைதானத்தில் 539 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக டெல்லியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.