தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு அதிகமாக மணல் அள்ளி 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது என தமிழக போலீஸ் டி.ஜி.பிக்கு, அமலாக்கத்துறை ஆதாரத்துடன் கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் அரசு விதிகளை மீறி சட்டவிரோதமாக மணல் எடுத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த வகையில் அரியலூர், கரூர், தஞ்சை, திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 34 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அப்போது அரசு அனுமதித்த அளவை விட 30 மடங்கு வரையில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 23.6 லட்சம் யூனிட் மணலை சட்டவிரோதமாக எடுத்ததன் மூலம், 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.
இந்நிலையில் முறைகேடுகள் அதிகாரிகளுக்கு தெரிந்தே நடைபெற்றுள்ளதாகவும், அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டும் யாரும் அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழக டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.