ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் பெய்த கனமழையால் வாகனங்கள் சேற்றில் சிக்கின.
வடஇந்தியாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. மலைப் பிரதேசமான ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதில், வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொண்டன.
அவற்றின் உரிமையாளர்கள் நீண்ட நேரம் போராடி, இடிபாடுகளை அகற்றி தங்களது வாகனங்களை மீட்டனர்.
டெல்லியில் மாநில கல்வித் துறை அமைச்சர் அதிஷியின் வீட்டை மழைநீர் சூழ்ந்தது. கனமழையால் டெல்லி வசந்த் விஹார் பகுதியில் சுவர் இடிந்து விழுந்தது. இதில், மூன்று தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கனமழையால், தெற்கு டெல்லியில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு அலுவலகத்தில் மழைநீர் புகுந்ததால், அலுவலர்கள் அவதி அடைந்தனர். ஜனக்புரா மற்றும் ஆர்.கே. ஆஷ்ரம் பகுதியில் வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்தன.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 18-இல் சாலையோர தடுப்புகள் கனமழைக்கு அடியோடு பெயர்ந்து விழுந்தன.
அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் கனமழையால் கட்டடங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக விவேகானந்தா கேந்திர வித்யாலயாவில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.