அமெரிக்காவில் தெலுங்கு பேசும் மக்கள் தொகை குறிப்பிடத் தக்க அளவில் அதிகரித்துள்ளதாக, அங்குள்ள புள்ளியியல் அட்லஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தெலுங்கு மக்களின் எண்ணிக்கை 12.3 லட்சத்தைத் தொட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவில் குறிப்பிட்ட சில மாகாணங்களுக்குச் சென்றால்,ஏதோ ஆந்திராவிலோ அல்லது தெலுங்கானாவிலோ இருப்பது போல ஒரு உணர்வு ஏற்படும் அளவுக்கு, அமெரிக்காவில்
தெலுங்கு பேசும் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது.
2016ம் ஆண்டு சுமார் மூன்றரை லட்சம் தெலுங்கர்கள் வாழ்ந்த அமெரிக்காவில் இன்று கிட்டத்தட்ட 12 லட்சத்துக்கும் மேல் தெலுங்கர்கள் இருக்கிறார்கள்.
குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், கலிஃபோர்னியாவில் 2 லட்சம், டெக்சாஸில் ஒன்றரை லட்சம், நியூ ஜெர்சியில் ஒரு லட்சத்து பத்தாயிரம்,இல்லினாஸில் 83,000 ,வர்ஜீனியாவில் 78,000, மற்றும் ஜார்ஜியாவில் 52,000
என்ற எண்ணிக்கையில் தெலுங்கைத் தாய் மொழியாக கொண்ட மக்கள் வாழ்கிறார்கள்.
இந்த அமெரிக்க மாகாணங்களில் எல்லாம் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், சுமார் 10,000 H1B விசா வைத்திருப்பவர்களுடன் ,ஆண்டுக்கு 60,000 முதல் 70,000 வரை தெலுங்கு பேசுவோர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வருகின்றனர் என்று அமெரிக்க புள்ளியியல் அறிக்கை தெரிவிக்கிறது.
முன்பெல்லாம் , தொழில் செய்வதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற நிலையில், இப்போது நான்காம் தலைமுறையினர், IT மற்றும் நிதித்துறை வேலை காரணமாகவே அமெரிக்காவுக்கு வருகிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப் பட்டுளள்து.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளில் ,மூன்றாவது இடத்தை தெலுங்கு பிடித்துள்ளது. முதலிடத்தில் இந்தியும், இரண்டாவது இடத்தில் குஜராத்தி மொழியும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் 350 மொழிகளில் 11வது மொழியாக தெலுங்கு மாறியுள்ளது என்பது ஆந்திராவுக்கு கிடைத்த பெருமையாக சொல்லப்படுகிறது.