செய்யும் தொழிலே தெய்வம். செய்வதை செம்மையாக செய்தால் கூரையைப் பிய்ச்சிட்டு தெய்வம் கொடுக்கும் என்று சொல்லக் கேட்டிருப்போம். ஒரு இளைஞருக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. யார் அந்த இளைஞர் ? அப்படி என்ன செய்தார் அவர் ? என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் தேயிலை நகரம் என்று சொல்லப்படும் திப்ருகார் மாவட்டம், அசாம் மாநிலத்தில் உள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் கிஷன் பகாரியா,Texts.com என்ற ஒற்றை இயங்குதள செய்தியிடல் செயலியை உருவாக்கி இருக்கிறார்.
கிஷன் பகாரியா உருவாக்கிய இந்த இணைய தளம், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து செய்தியிடல் தொடர்பான தேவைகளையும் நெறிப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான செய்தி மேலாண்மை தளமாகும்.
இது வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் போன்ற செய்தியிடல் பயன்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கு பயன்படும் ஒரு செயலி ஆகும்.
dash board பகுதியில் உள்ள உரையாடல்களை எந்த நேரத்திலும் எளிதாக மீண்டும் எடுத்து பயன்படுத்த வசதியாக கிஷன் பகாரியா இந்த செயலியை வடிவமைத்துள்ளார்.
ஒருவர் பகிர்ந்த செய்திகள் பார்க்கப்பட்டதா என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்வதைத் தடுப்பதன் மூலம் வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் பயன்படுத்துவோருக்கு அவர்களின் தனியுரிமையை பாதுகாப்பதே இந்த Texts.com செயலியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செயலி, கொஞ்சம் கொஞ்சமாக, மற்றவர்களுக்கு தெரிய ஆரம்பித்து, மக்கள் மத்தியில் பிரபலமானது.
பிறகு, சந்தையில் உள்ள பிரபல தொழில் அதிபர்களின் கவனத்தையும் இந்த செயலி ஈர்த்தது. இந்நிலையில் தான், WordPress மற்றும் Tumblr செயலிகளின் தலைவர் Matt Mullenwag பார்வை கிஷன் பகாரியா மீது விழுந்தது. கிஷனின் அறிவுத் திறமைக்கு விலையாக, முல்லன்வாக், 50 மில்லியன் அமெரிக்க டாலருக்கு கிஷனின் செயலியை வாங்கி இருக்கிறார்.
வாங்கியதோடு மட்டுமில்லாமல், கிஷனை Texts.com இன் முதன்மை செயல் அதிகாரியாக பொறுப்பேற்குமாறும் Matt Mullenwag கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய ரூபாய் மதிப்பில், சுமார் 416 கோடிகள் இது என்பதால் கிஷனின் தொழில்நுட்ப அறிவு, அவரை ஒரே இரவில் கோடீஸ்வரனாக்கி உள்ளது.
திப்ருகாரில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்த கிஷன் பகாரியா, அக்ரசென் அகாடமியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுடன் தனது பள்ளிப் படிப்பை நிறுத்தியபின் கல்லூரிக்குச் செல்வதற்குப் பதிலாக, 12வது வயதில் இருந்து, புதுமையான தொழில்நுட்ப செயலிகளை உருவாக்குவதில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.