வரும் நவம்பர் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முன், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் முதல் நேரடி விவாதத்தில் ஒருவரை ஒருவர் சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க தேர்தல் களத்தில், ஜோ பைடனும்,டொனால்ட் டிரம்ப்பும் இரண்டாவது முறை அதிபர் ஆவதற்காக களம் இறங்கியுள்ளனர்.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அதிபர் வேட்பாளர்கள் நேரடி விவாதத்தில் கலந்து கொள்வது அமெரிக்காவில் வழக்கம். அது, வாக்காளர்களுக்கு அதிபர் வேட்பாளர்களை எடை போடுவதற்கு உதவும். அந்த வகையில், இரண்டு நேரடி விவாதங்களுக்கு, ஜோ பைடனும்,டொனால்ட் டிரம்ப்பும் ஒப்புதல் அளித்திருந்தனர்.
ஒரு கேள்விக்குப் பதில் அளிக்க இருவருக்கும் தலா 2 நிமிடம் வழங்கப்படும் என்ற நிபந்தனையுடன் கூடிய இந்த விவாத நிகழ்ச்சியின் மொத்த நேரம் 90 நிமிடங்களாகும்.
1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்ற முதல் அதிபர் வேட்பாளர்கள் விவாதம் என்பதால் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
1960 ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் துணை அதிபர் ரிச்சர்ட் நிக்சனுக்கும் ஜனநாயகக் கட்சியின் அப்போதைய இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் கென்னடிக்கும் இடையில் நடைபெற்ற அதிபர் தேர்தல் விவாதத்தின் போது அரங்கிற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகு 16 ஆண்டுகள் நேரடி விவாதம் இன்றி அதிபர் தேர்தல்கள் நடைபெற்றன.
1976ஆம் ஆண்டு, அப்போதைய அதிபர் ஜெரல்ட் ஃபோர்டுக்கும் முன்னாள் ஜியார்ஜியா ஆளுநரான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜிம்மி கார்ட்டருக்கும் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பிறகு நடைபெற்ற அதிபர் தேர்தல் நேரடி விவாத நிகழ்ச்சியிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரொனா பெருந்தொற்று காலத்தில்,ஜோ பைடனும் டிரம்ப்பும் பங்கேற்ற இரண்டு விவாத நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றன.
இந்த ஆண்டு அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான முதலாவது நேரடி விவாதம், ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவில் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது.
கையில் குறிப்புகளை எடுத்துவர அனுமதி மறுத்த நிலையில், இரு அதிபர் வேட்பாளர்களுக்கும் குறிப்பெடுக்க பேனா மற்றும் தாள்கள் வழங்கப் பட்டன.
யார் முதலில் எந்தப் பக்கம் நின்று விவாதத்தைத் தொடங்குவது என்பது பூவா தலையா போட்டு முடிவு செய்யப்பட்டது.
விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி கொள்ளவில்லை என்பதே விவாதத்தில் அனல் பறக்கும் என்பதைச் சுட்டிக் காட்டியது.
அதுபோலவே, அமைதியாகத் தொடங்கிய விவாதம் போக போக சூடு பிடித்தது. விலைவாசி உயர்வு, அமெரிக்க பொருளாதாரம், அமெரிக்கர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, உக்ரைன்-ரஷ்யா போர், காசா-இஸ்ரேல் போர், பருவநிலை மாற்றம், அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள், அமெரிக்காவின் நீதித்துறை நியமனங்கள், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள், அமெரிக்க குடியேற்றச் சட்டங்கள் முதலிய விவகாரங்கள் குறித்து இருவரும் காரசாரமாக விவாதித்தனர்.
ஜோ பைடன் ஆட்சியில், அமெரிக்க பொருளாதாரம் சரிவை சந்தித்ததாகவும், உலக அளவில் அமெரிக்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகவும் குற்றம் சாட்டிய, டொனால்ட் டிரம்ப் கடந்த 4 ஆண்டு கால அமெரிக்காவின் நிலை மிக மோசமானது என்று தெரிவித்தார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து ஜோ பைடன் வெளியேறியதை அமெரிக்க வரலாற்றில் மிகவும் துரதிர்ஷ்டமானது என்று கூறிய டொனால்டு ட்ரம்ப், உக்ரைன் போருக்கு ஜோ பைடனின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று வாதங்களை முன் வைத்தார்.
இதற்கெல்லாம் பதிலளித்த ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் முதல் குற்றவாளியாக இருக்கக்கூடும் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக டிரம்பின் மீதான வழக்குகள் பற்றி கூறினார்.
அமெரிக்காவின் குடியேற்ற சட்டங்கள் விஷயத்தில் இரு வேட்பாளர்களும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர்.
81 வயதான அதிபர் ஜோ பைடன், தனது கருத்துக்களைத் தடுமாற்றத்துடன் வெளிப்படுத்தினார் என்றால், ரியாலிட்டி ஷோ அனுபவம் வாய்ந்த 78 வயதான டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் மீது புகார் பட்டியலை மளமளவென வாசித்தார் என்று நிகழ்ச்சியை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான இரண்டாவது நேரடி விவாதம் வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.