போதைப்பொருள் கடத்தல் மன்னனும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை கைது செய்திருக்கிறது அமலாக்கத்துறை. NCB-ஐ தொடர்ந்து ED மேற்கொண்டிருக்கும் இந்நடவடிக்கையால் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக கடத்தல்காரர்கள் காவல்துறையைக் கண்டால் பதுங்குவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒருவர் ஆண்டுக்கணக்கில் ஆட்சியாளர்களோடும், காவல்துறை உயரதிகாரிகளோடும் நெருக்கமாக இருந்துகொண்டே இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள்களைக் கடத்தியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி, பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், டி.ஜி.பி. என அனைவரோடும் நெருக்கமாக நின்றபடி அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்றைக்கும் இணையத்தில் பார்க்கலாம்.
அந்த நபர்தான் ஜாபர் சாதிக். போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து திரைப்படத் தயாரிப்பு, உணவகம், ரியல் எஸ்டேட் என பல தொழில்களை செய்தவர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு சூடோஎஃப்ட்ரின் (Pseudoephedrine) என்னும் போதைப்பொருள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டார் திமுக அயலக அணியின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்.
கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் அதாவது KINGPIN என்று ஜாபரை குறிப்பிட்டது மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு.
அப்படிப்பட்டவர் ஒரு மாநிலத்தின் உச்சபட்ச பொறுப்பில் இருக்கும் முதலமைச்சருடன் சர்வசாதாரணமாக புகைப்படத்தில் POSE கொடுத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று சொல்லப்படும் ஜாபர் சாதிக், பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்திருக்கிறார். தங்கும் விடுதி, உணவகம் உள்ளிட்ட தொழில்களை செய்து வந்த அவர், ஒருகட்டத்தில் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் இறங்கியதாக தெரிகிறது. சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் கைமாற்ற முடியம் என்னுமளவுக்கு வளர்ந்த சாதிக், போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கிலும் இணைந்திருக்கிறார்.
தொடக்கத்தில் ஹெராயின், கேட்டமைன் போன்ற போதைப்பொருட்களை அவர் கடத்தியதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில் SPECIAL K என்றழைக்கப்படும் கேட்டமைனுக்கு இருந்த அதீத தேவையைப் பயன்படுத்தி கோடிகளை குவித்ததாகவும் தெரிகிறது.
கடத்தலுக்காகவே ஏற்றுமதி நிறுவனங்களை தொடங்கிய ஜாபர் சாதிக், வளையல், HEALTH MIX மற்றும் வெல்ல மூட்டைகளுக்குள் வைத்து போதைப்பொருள்களை இடம் மாற்றியிருக்கிறார். மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்ட சாதிக், அதன் மூலப்பொருளான சூடோஎஃப்ட்ரினையும் விட்டுவைக்கவில்லை.
2013-ஆம் ஆண்டு சூடோஎஃப்ட்ரின் வைத்திருந்த புகாரில் சென்னை MKB நகர் காவல்துறையினரால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். எனினும் அந்த வழக்கில் அரசுத் தரப்பு உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. அதன் காரணமாக விடுவிக்கப்பட்ட சாதிக், தொடர்ந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார்.
பொதுவாக இதுபோன்ற நபர்களை உளவுத்துறை கண்காணிப்பு வளையத்திலேயே வைத்திருக்கும். ஆனால் சாதிக் விஷயத்தில் அப்படி நடந்ததாக தெரியவில்லை. இல்லையென்றால் சென்னை மாநகர காவல்துறைக்கே சி.சி.டி.வி. கேமராக்களை வாங்கி கொடுத்திருப்பாரா அவர்?
2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சியில் ஜாபருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசும் காவல்துறையும் தெரிந்தோ தெரியாமலோ கோட்டைவிட்டதைப் போல் மத்திய அரசும், விசாரணை அமைப்புகளும் விடப்போவதில்லை. 2018-ஆம் ஆண்டு ஜாபர் சாதிக் மலேசியாவுக்கு கடத்திய கேட்டமைன் போதைப்பொருள் மும்பை சுங்கத்துறையிடம் சிக்கியது. அந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் இருக்கிறது.
அதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார். அவருடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த புகாரில் திரைப்பட இயக்குநர் அமீர் உள்ளிட்ட சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையும் ஜாபரை கைது செய்திருக்கிறது. கடத்தல் மற்றும் ஹவாலா மூலம் அவர் ஈட்டிய கோடிக்கணக்கான ரூபாய்கள் யார் யாருக்கு எப்படிச் சென்றது என்ற தகவல்கள் அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவர வாய்ப்புள்ளது. அப்போது மேலும் பலரின் தொடர்புகள் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.