விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சாத்தூரை அடுத்த பந்துவார்பட்டி பகுதியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இருபதிற்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில், நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல ஆலைக்கு வந்த தொழிலாளர்கள் பணியைத் தொடங்கவிருந்த நிலையில், ரசாயன கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
இதில், 4 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.