தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புடைய விவகாரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காலை முதலே அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிஜ்புத் தாகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். குழந்தையம்மாள் நகரில் அகமது என்பவர் வீட்டில், மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும். சாலியமங்கலத்தில் அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோட்டில் இரண்டு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டனர். ஈரோடு அசோக் நகர் ஆறாவது வீதியில் சர்புதீன் என்பவரின் வீட்டிலும், ஈரோடு பெரியார் நகரில் வசிக்கும் முகமது இசாக் என்பவரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மண்டையூர் வடகாடு கிராமத்தில் அப்துல்கான் என்பவர் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றதாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.