கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் வி.சி.க. நிர்வாகி திராவிட மணியிடம், டிஎஸ்பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி, கடந்த 2022 ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து நடந்த கலவரத்தில், பள்ளி மற்றும் காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டன.
இந்த வழக்கில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி மற்றும் விசிக நிர்வாகி திராவிடமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தவேண்டும் என்ற தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கலவரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் ஆஜரான விசிக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிட மணியிடம், டிஎஸ்பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால், மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விசாரணைக்கு ஆஜர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.