அமெரிக்காவில் நடந்த இசைப் போட்டி நிகழ்ச்சியில் நடுவர்களை திகைக்க வைத்த 10 வயது சென்னை கிடாரிஸ்ட் மாயா நீலகண்டன் ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றுவிட்டார். யார் இந்த மாயா நீலகண்டன் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த மகேந்திரா தனது எக்ஸ் தளத்தில், தேவதைகளின் தேசத்தில் இருந்து ஒரு ராக் இசை தேவதை என்று 10 வயது மாயா நீலகண்டனைப் பாராட்டி, பதிவு செய்திருந்தார் . இந்த பதிவை லட்சக்கணக்கானோர் பார்த்த நிலையில், சிறுமியின் திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் நடக்கும் America’s Got Talent, நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சைமன் கோவல், ஹெய்டி க்ளம், சோபியா வெர்கரா மற்றும் ஹோவி மண்டேல் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.
America’s Got Talent, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிடார் வாசித்து நடுவர்களை வியக்க வைத்த மாயா நீலகண்டன் கிடார் வாசித்து முடித்ததும் அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டினார்கள்.
நான்கு நடுவர்களில் ஒருவரான சைமன் கோவல், தயங்கி தயங்கி கிடார் வாசிக்கத் தொடங்கிய மாயா பிறகு , ராக் இசை தேவதையாக மாறி விட்டார் என்று தெரிவித்திருந்தார்.
இந்திய பாரம்பரிய மாறாமல் காக்ரா உடையில், நெற்றியில் பொட்டுடன் இந்திய சிறுமியாகவே மாயா மேடையில் தோன்றியதும் அனைவருக்கும் பிடித்துவிட்டது.
நடுவராக இருந்த நடிகை சோஃபியா, மாயா நீலகண்டனுக்கு 10 வயது தான் என்பதை நம்ப முடியவில்லை என்று தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்திருந்தார்.
சென்னையைச் சேர்ந்த மாயா நீலகண்டன் , 5 வயது முதல் கிடார் இசை கற்க தொடங்கிய அவர் தனியாக ஒரு youtube சேனல் நடத்துகிறார்.
அமெரிக்காவின் பிரபல கிடார் இசைக் கலைஞர் Gary Wayne Holt தான் கையெழுத்திட்ட கிடாரை மாயா நீலகண்டனுக்கு பரிசளித்துளளார். அதை பெருமையாக கருதும் மாயா நீலகண்டன்,கிடார் இசையில் புதிய பரிமாணத்தை உருவாக்குவதே தனது இசைக் கனவு என்று தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்துள்ள மாயா நீலகண்டன், கர்நாடக இசை கலந்த மேற்கத்திய சங்கீதத்தை அளித்த தம்மை பலரும் பாராட்டி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.