ஹத்ராஸ் ஆன்மீக நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், இந்த சம்பவம் தனது இதயத்தை உலுக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடுபவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஹத்ராஸ் நெரிசல் குறித்து பேசிய பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உத்தரப் பிரதேச அரசு செய்து வருவதாகக் கூறிய மோடி, மீட்புப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு அளிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.