மதமாற்றத்தை அனுமதித்தால் நாட்டில் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள் என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற கிறிஸ்தவ பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கைலாஷ் என்பவர் உத்தர பிரதேசத்தில் இருந்து பொதுமக்களை கட்டாயமாக அழைத்துச் சென்று மதமாற்றம் செய்ததாக புகாரளிக்கப்பட்டது.
இது தொடர்பாக கைலாஷ் மீது ஆட்கடத்தல் மற்றும் சட்ட விரோத மதமாற்றம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் கைதான கைலாஷ் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், மதப்பிரசாரம் என்பது அந்த மதத்தை பற்றிய கருத்துகளை பரப்புவது தானே தவிர, ஒருவரை வேறொரு மதத்துக்கு மாற்றுவது அல்ல, என தெரிவித்தார்.
இது போன்ற மத கூட்டங்கள் நடப்பதை உடனடியாக நிறுத்தவில்லை என்றால், நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள் என்றும் அவர் கூறினார். எனவே கைலாஷ், பொதுமக்களை அழைத்து சென்று கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றியுள்ளது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாலும் ஜாமின் மனு நிராகரிக்கப்படுகிறது என நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் உத்தரவிட்டார்.