இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்த வேட்டி – சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆசாரங்குப்பம் கிராமத்தில், திமுக கிளை செயலாளர் ஏ.சி. இராமலிங்கம் என்பவரின் வீட்டில் இருந்து வாக்காளர்களுக்கு வழங்க இருந்த வேட்டி, சட்டை, சேலை உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வேட்டி – சேலைகளை திமுகவினர் கொல்லைப்புறம் வழியாக எடுத்துச் செல்ல உதவி செய்துள்ளதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கும் திமுக, அரசு எந்திரத்தின் உதவியுடன் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கவும், தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கவும் முயல்கிறது எனக் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்பினால், வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுக்க முயன்ற திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.