திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வீட்டை காலி செய்யுமாறு மிரட்டிய அதிகாரிகளால் இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் வட்டாட்சியர் உள்ளிட்ட 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோட்டைகரையைச் சேர்ந்த கல்யாணி என்பவர் அப்பகுதியில் தானமாக வழங்கப்பட்ட ஒன்றரை செண்ட் பட்டா நிலத்தில் வீடு கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்துள்ளார். இவரது வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் வீட்டை காலி செய்யுமாறு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மிரட்டியதுடன், வீட்டின் மின் இணைப்பையும் துண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார், 50 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவரை, மேல்சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பீரிதி , வருவாய் ஆய்வாளர் கோமதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய சர்மா ஆகிய மூவரையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ராஜ்குமார், தற்கொலை முயன்ற சம்பவத்திற்கு கோட்டாட்சியர், ஊர் தலைவர் உள்ளிட்டோர் தான் காரணம் என வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.