டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பார்படாஸில் இருந்து நாடு திரும்பியது. விமான நிலையத்தில் அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பிரதமருடனான சந்திப்பிற்கு பிறகு இந்திய அணி வீரர்கள் மும்பை புறப்பட்டனர்.
மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்திய அணி வீரர்கள் நாரிமன் பாயின்ட் பகுதியில் இருந்து, வான்கடே மைதானம் வரை திறந்தவெளி பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றனர். வழிநெடுகிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சுமார் 2 மணி நேர ஊர்வலத்துக்கு பின்னர் இந்திய அணி வீரர்கள் வான்கடே மைதானத்தை சென்றடைந்தனர். அங்கு அனைத்து வீரர்களும் நடனமாடி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில், இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
, டி-20 உலகக்கோப்பையுடன் இந்திய வீரர்கள் மைதானத்தில் அணிவகுத்து சென்றனர். அப்போது, வந்தே மாதரம் பாடலை பாடி உற்சாகத்துடன் நடந்து சென்றனர்.