3 இந்தியர்களில் ஒருவர் கல்லீரலில் அதிகக் கொழுப்பையும், முன்கூட்டிய நீரிழிவையும், வளர்சிதை மாற்றக் கோளாறுகளையும் கொண்டிருப்பதாக மத்திய டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
டெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் கல்வி நிறுவனத்தில் இன்று (05.07.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லீரல் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் மெய்நிகர் முறையிலான இந்தியா – பிரான்ஸ் கல்லீரல், வளர்சிதை மாற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வலைப்பின்னலை அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மெய்நிகர் முறையிலான இந்த சிகிச்சை முறை கல்லீரல் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த உதவும் என்றார். கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்வது சிறு வயதிலேயே நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பல நோய்களுக்கு காரணமாகிறது என்று அவர் குறிப்பிட்டார். தாமே ஒரு நாளமில்லா சுரப்பி மருத்துவர் என்பதால் கல்லீரலில் அதிகக் கொழுப்பின் அபாயத்தையும் அது தொடர்பான மற்ற நோய்கள் பற்றியும் அறிந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
நோயை குணப்படுத்தும் மருத்துவத்தில் இந்தியா உலகளாவிய தலைவராக இருப்பது மட்டுமின்றி நோய்த் தடுப்பு மருத்துவத்திலும் உள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். கல்லீரலில் கொழுப்பு சேருவதை பல்வேறு நிலைகளில் கண்டறிவதற்கு எளிதான, குறைந்த செலவிலான பரிசோதனை முறைகளை உருவாக்குவது அவசியம் என்று அவர் கூறினார்.