பிரிட்டன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் தோல்விக்கு தாம் பொறுப்பு ஏற்பதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
650 தொகுதிகளை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி 412 தொகுதிகளில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 121 தொகுதிகளில் மட்டும் வென்று, ஆட்சியை இழந்தது.
இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் லண்டன் டவுனிங் தெருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது உணர்ச்சி வசப்பட்டு பேசிய அவர், பிரதமராக தனது பணியை முழுமையாக நிறைவேற்றிய போதிலும், ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கிவிட்டதாக தெரிவித்தார்.
மக்களே இறுதி தீர்ப்பு வழங்குபவர்கள் என்று கூறிய ரிஷி சுனக், தோல்விக்கு பொறுப்பேற்று, கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கூறினார். அப்போது அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி உடனிருந்தார்.