சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் வந்தே மாதரம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் நடைபெற்று வருகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்திற்கு முன்னதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மரக்கன்றை நட்டார். இந்தக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள், மறைந்த பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள், பங்காரு அடிகளார், எம் எஸ் சுவாமிநாதன், இளையராஜாவின் மகள் பவதாரணி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, பாஜக மூத்த தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 4000-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராய மரணம் ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.