தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் பாடுவதற்காக பிரபல பாப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு 83 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் இந்த ஜஸ்டின் பீபர்? பார்க்கலாம்…
டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமான பலர் நல்ல நிலையை அடைந்திருக்கிறார்கள். திறமை இருந்ததால் மேலே வந்திருக்கிறார்கள்… இதில் என்ன இருக்கிறது? என்று கேட்கத் தோன்றலாம்.
இணைய உலகில் வாழும் இன்றைய தலைமுறைக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த சமூக வலைத்தலங்கள் என்னும் மேடை இருக்கிறது. அதனால் கைத்தட்டல், அங்கீகாரம் போன்றவற்றை எளிதாக பெற முடிகிறது. ஆனால் கடந்த தலைமுறை அப்படியில்லை. ஒரு வாய்ப்பு… ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க… என்னைய நிரூபிச்சுக்காட்டுறேன்… என்று தங்கள் வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
அப்படிப்பட்ட சிரமங்களுக்கு ஜஸ்டின் பீபர் ஆளாகவில்லை. அதே நேரம் அவரது வெற்றி எளிதாகவும் இல்லை.
1994-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி கனடாவின் ONTARIO-வில் பிறந்தார் ஜஸ்டின். சிறு வயதிலேயே தந்தை பிரிந்து சென்றதால் பீபரை வளர்க்கும் பொறுப்பை அவரது தாய் தனியே சுமந்தார். சிறுவன் ஜஸ்டினுக்கு இளம் வயதிலேயே இசை மீது ஆர்வம் இருந்தது. வறுமையையும் மீறி ட்ரம்ஸ், பியானோ, கிடார், ட்ரம்பெட் போன்ற கருவிகளை இசைக்க கற்றுக்கொண்டார். தமது 13-ஆவது வயதில் உள்ளூர் இசைப்போட்டி ஒன்றில் பங்கேற்ற ஜஸ்டின் இரண்டாவது பரிசைப்பெற்றார்.
அந்த நிகழ்ச்சியை வீடியோவாக பதிவு செய்த ஜஸ்டினின் தாய் அதை யூ-டியூபில் பதிவிட்டார். போட்டியை நேரில் காண முடியாத உறவினர்களுக்காக இந்த ஏற்பாடு. அதைத்தொடர்ந்து ஜஸ்டின் பீபர் பாடும் மேலும் சில வீடியோக்களையும் அவர் பதிவிட்டார். அவை TALENT AGENT ஒருவரின் கண்ணில்பட பாப் இசைக்கான கதவை திறந்துவிட்டார்.
“THAT WAS NOT LUCK, THAT WAS SKILL” ஜஸ்டின் பீபரின் முதல் பாப் பாடலான ‘ONE TIME’ இப்படித்தான் தொடங்கும். பாட்டு மட்டுமல்ல ஜஸ்டினின் வாழ்க்கையும் அப்படித்தான். அவரது வாழ்க்கையில் எதுவும் அதிர்ஷ்டத்தால் நடக்கவில்லை. எல்லாமே திறமையால்தான் நடந்தது.
2009-ஆம் ஆண்டு தொடங்கிய ஜஸ்டின் பீபரின் பாப் இசைப் பயணம் அதன்பிறகு படிப்படியாக உச்சத்துக்குச் சென்றது. JB-ன் குரல் ரசிகர்களை கிறங்கடித்தது. பணம் மற்றும் புகழ் சேரும்போது சர்ச்சைகளுக்கு குறைவிருக்காது. JB-யும் அதற்கு விதிவிலக்கல்ல. அவ்வப்போது மன அழுத்தத்துக்கும் ஆளான அவர் 2022-ஆம் ஆண்டு முகவாத நோயால் பாதிக்கப்பட்டார்.
ஜஸ்டின் பீபரின் இந்த வீடியோவைப் பார்த்து அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர் சிகிச்சை மற்றும் பயிற்சிகள் மூலம் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்திருக்கும் JB மீண்டும் பாப் இசை உலகை கலக்க தொடங்கிவிட்டார். அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியில் திருமண நிகழ்ச்சியில் பாடுவதற்காக தற்போது இந்தியா வந்துள்ள ஜஸ்டின் பீபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக அவருக்கு 83 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.