இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் குளறுபடி நடைபெற்றதாக கூறப்பட்டாலும், மருத்துவக் கலந்தாய்வை நடத்த எந்தத் தடையுமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே நீட் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் 8-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதன்பின்னர், இளநிலை மருத்துவக் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.