பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முதலமைச்சர் ஸ்டாலினின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் அருகே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டு உள்ளது என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டுவதாக குறிப்பிட்டுள்ள அவர், அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக ரவுடிகளின் அட்டகாசம் தலைதூக்கி இருப்பதாக விமர்சித்துள்ளார்.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் சென்னை மாநகரில் படுகொலை செய்யப்படிருப்பது மக்களை அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உறைய வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.