சென்னை வானகரத்தில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதலாவதாக மக்களின் பேராதரவோடு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தை முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி வழிமொழிந்தார்.
தமிழகத்தை அச்சுறுத்தும் கள்ளச்சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணை தேவை என்ற தீர்மானத்தை சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் முன்மொழிந்தார். இந்தத் தீர்மானத்தை முன்னாள் எம்எல்ஏ சம்பத் வழிமொழிந்தார்.
முல்லைப் பெரியாற்றில் அணை கட்டும் கேரளா, காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்தைக் கண்டித்தும், நதிநீர் உரிமையை மீட்டெடுக்கவும் 3-ஆவது தீர்மானத்தை முன்னாள் எம்.பி. கே.பி. ராமலிங்கம் முன்மொழிய, அதை ஜி.கே.நாகராஜ் வழிமொழிந்தார்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலிக்கக் கோரி கொண்டுவரப்பட்ட நான்காவது தீர்மானத்தை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா முன்மொழிய, அந்தத் தீர்மானத்தை நடிகர் சரத்குமார் வழிமொழிந்தார்.
போதைப்பொருள் கடத்தலில் காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கக் கோரி, 5ஆவது தீர்மானத்தை முன்னாள் எம்.பி. வி.பி. துரைசாமி முன்மொழிய, அதை அர்ஜுன மூர்த்தி வழிமொழிந்தார்.
நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவ எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் கண்டித்து கொண்டுவரப்பட்ட 6-ஆவது தீர்மானத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தை விளவங்கோடு முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி வழிமொழிந்தார்.
இறுதியாக பள்ளிகளில் மத அடையாளங்களை அழிக்க முற்படும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை முன்னாள் மேயர் கார்த்தியாயினி வழிமொழிந்தார்.