சுமார் 2,500 புதிய பொது பயணிகள் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் 10,000 பெட்டிகளைத் தயாரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த டிசம்பர் மாதம், தர்பங்கா-அயோத்தி-ஆனந்த் விகார் மற்றும் மால்டா-விஸ்வேஸ்வரயா வழித்தடங்களில் இரண்டு புதிய அம்ரித் பாரத் இரயில்களைப் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்திருந்தார்.
அம்ரித் பாரத் இரயில் என்பது புஷ்-புல் ரயிலாகும். LHB (Linke-Hofmann-Busch)என்ற தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயிலின் இரு முனைகளிலும் என்ஜின்கள் உள்ளன. அம்ரித் பாரத் ரயில் வேகமாக செல்வதற்கு இந்த தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது.
50 அம்ரித் பாரத் ரயில்களின் உற்பத்தி நடந்து வரும் நிலையில், மேலும் 150 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 5300 கிலோமீட்டருக்குப் புதிய இரயில் வழித் தடங்கள் சேர்க்கப் பட்ட நிலையில், இந்த ஆண்டும், கூடுதலாக 800 கிலோமீட்டருக்கும் மேலான இரயில் பாதைகள் இணைக்கப் பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி, Kavach தானியங்கி ரயில் பாதுகாப்பு, இந்திய ரயில்வேக்கான தேசிய ATP அமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம்,இந்திய இரயில்வே துறை, இரயில் பயணத்துக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளது.
Kavach அடர்த்தியான மூடுபனி போன்ற மோசமான வானிலையின் போது இரயில் இயக்கங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. தேவைப்படும் போது தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த தானியங்கி ரயில் பாதுகாப்பு, இரயில் வேகத்தைக் குறைத்து, விபத்துகளைத் தடுக்கவும்வழிவகை செய்கிறது.
அடுத்த சில மாதங்களில் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய AI தொழில்நுட்பத்தை மத்திய அரசு வெளியிட இருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியா AI செயல் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. குளோபல் இந்தியா AI உச்சிமாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அந்த செயல் திட்டங்கள், ரயில்வே தரும் சார்ந்த புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.
சொல்லப்போனால், நாட்டின் முக்கிய துறைகளில் ஒன்றான இந்திய ரயில்வே துறை, கடந்த 10 ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
வந்தே பாரத் இரயில்களின் வருகை, இரயில் பயணிகளின் பயண அனுபவங்களை புதிதாக மாற்றியிருக்கிறது. வந்தே பாரத் இரயில்களுக்கு ஏற்ப இரயில் நிலையங்களையும் நவீனமயமாக்குவது அவசியமாகிறது. இந்த வகையில் பிரதமர் மோடி, அம்ரித் பாரத் இரயில் நிலைய திட்டத்தை தொடங்கி வைத்தார் . இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 1309 இரயில் நிலையங்களை புதுப்பிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இரயில் நிலையங்களை மறுசீரமைப்பது, பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது, விபத்துக்களைத் தடுக்கும் வகையில் சிறந்த சிக்னல் முறைகளை நடைமுறை படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை இந்த திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.